தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு

 

இத்தனை காலமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர் எவ்வளவோ போராட்டங்கள் செய்து வந்த போதிலும் தாய் தமிழ் நாடு மக்கள் அமைதியாகவும் பாராமுகமாகவும் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. எங்கள் அவலத்தை பற்றிய விழிப்புணர்வோ அதை ஒட்டிய எழுச்சியோ கோடி கணக்கிலுள்ள தாய் தமிழ் நாட்டு மக்கள் இடையில் இல்லாமை என்பது ஏமாற்றத்தையே இத்தனை காலமும் தந்தது.

ஆனால் அக்குறையை தீர்த்து தமிழ் நாடு முழுவதும் ஈழ உணர்வு பற்றி எரியும் பொருட்டு உங்கள் போராட்டங்கள் அமைந்துள்ளது. இதைத் தான் இத்தனை காலமும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தாயகத்தில் வாழும் உடன் பிறப்புகளும் எதிர் பார்த்தோம்.

தாய் மண்ணின் விடிவிற்கான போரட்டத்தை எங்கள் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இளையோர் கையில் 2008 ஆம் ஆண்டு மாவீரர் உரையின் மூலம் ஒப்படைத்தார். அதை நன்கு புரிந்து புலம்பெயர்ந்து வாழும் இளையோரும், குறிப்பாக ‘தமிழ் இளையோர் அமைப்புகளும்’ செயல்பட்டு வருகிறது. இவர்களுடன் தாய்த் தமிழ் நாட்டு மாணவர்களும் கைகோர்க்கும் வண்ணம் வீறுகொண்டு எழுந்து புரட்சியுடன் போராடுவது புலம்பெயர் ஈழ தமிழர்களிற்கும் தாயக உறவுகளிற்கும் புத்துணர்வும் உற்சாகமும் அளித்துள்ளது.

எங்களது போராட்டம் ஓயவில்லை மாறாக அது மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதுவும் மாணவர்கள் சக்தியாக, 1972 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக பேரினவாத இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பினால் கோபம் அடைந்த அன்றைய மாணவர்களாக இருந்த தேசியத்தலைவரும் அவரது நண்பர்களும் தங்களது பாரிய எதிர்ப்பினை காட்டினார்கள் அதேபோல உங்களிடம் இருக்கும இந்த உத்வேகம் எங்களது சுதந்திர தமிழீழ தனியரசை அடைய என்றும் எங்களோடு இருக்கும் என்று இளையோரகிய நாம் கருதுகின்றோம்.

இன்று எமது போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது, எல்லா நாடுகளும் எம்மை உற்றுநோக்கிய வண்ணம் உள்ளார்கள். சனல் 4 தனது ஊடகதின் மூலம் எமது மக்களின் பல அவல நிலைகளை வெளிக்கொண்டு வருகிறது. ஆனாலும் சர்வதேசம் இப்பவும் எமது மக்களின் குரல்களை செவிசாய்ப்பதாக இல்லை. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரவுள்ள நிலையில்,இலங்கையில் நடைபெற்றவை போர்க்குற்றமோ அல்லது மனித உரிமை மீறல்களோ அல்ல; அது இன அழிப்பு என்ற உங்கள் தெளிவான நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம். அத்துடன் மாணவர்களாகிய நீங்கள் முன்வைத்திருக்கும் அனைத்துலக சுயாதின விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மற்றும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற உங்களதுகோரிக்கைகளை நாம் வரவேற்கிறோம்.

அன்று தொட்டு இன்று வரை தமிழர்களுக்கான எந்த உரிமைகளும் உரியமுறையில் வழங்கப்படவில்லை.அடக்குமுறைகளும் சமுதாய சீர்கேடுகளும் குறைந்தபாடில்லை அதேபோல எமது தாயக நிலப்பரப்புகளும் தமிழர்களின் அடையாளங்களும் வெகு வேகமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் மற்றும் மாணவர்களின் குரல்களும் இனவாத அரசினால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டுக் கொண்டிருகிறார்கள். அடக்குமுறைகளுக்குள் அடைபட்டு கிடக்கும் இனம் அல்ல நாம், போராடுவோம் இறுதி வரை போராடுவோம்.

உங்கள் போராட்டம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள், மாணவர் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ அரசு பிறக்கட்டும்!

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்

தமிழ் இளையோர் அமைப்பு
ஐக்கிய இராச்சியம்

You may also like...