15th Year – தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு. – Balageetha

என் வாழ்வின் ஒரு பகுதி தமிழ் இளையோர் அமைப்பு…..

   தாயகத்தில் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தை சிறிதளவு குறைத்தது தமிழ் இளையோர் அமைப்பு.

பிரித்தானியாவில் வாழும் நான் இங்கிருந்து எமது தாயகத்திற்கு உதவி செய்வதற்கு வழிவகுத்தது தமிழ் இளையோர் அமைப்பு.

எமது தேசத்தின் புதல்வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினத்தன்று என்னை தமிழ் இளையோர் அமைப்பில் இணைத்துக் கொண்டேன். இணைந்து சில நாட்களில் ஆழிப்பேரலை எமது தாயகத்தை தாக்க நாங்கள் வீதியில் இறங்கி உதவி கோரினோம்.

“இளந்தளிர் 2015” அதில் எனது பங்களிப்பு நிகழ்ச்சி நடந்த  நாள் அன்று மட்டுமே. தமிழ் பாடசாலையில் ஏதோ ஒரு திரைப்பட பாடலுக்கு அபிநயம் பிடித்த என் தங்கைகள் வீரம் கொண்ட தமிழீழ எழுச்சி பாடல்களுக்கு தங்கள் நாட்டிய திறனை வெளிப்படுத்தினார்கள். ஏதோ ஒரு கிளர்ச்சி என் மனதிலும் உடலிலும்.

மாதாந்த ஒன்றுகூடல் தமிழீழ சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்துகொள்வது என எனது பயணம் தொடர்ந்தது. வடகிழக்கு பிரதேச உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், இளந்தளிர் 2006 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், இளந்தளிர் 2007 ஒருங்கிணைப்பாளர், என எனக்கு பல முகங்களை தந்தது தமிழ் இளையோர் அமைப்பு. இணையற்ற ஆளுமையின் கீழ் எனது திறமைகள் வளர்ந்தன. கூச்ச சுபாபம் கொண்ட நான் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தேன் என்பது எனக்கு வியப்பை அளிக்கின்றது.  இன்னும் பல புது அனுபவங்களை தமிழ் இளையோர் அமைப்பு எனக்கு உருவாக்கியது.

தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் எனக்கு நண்பர்கள் ஆனார்கள். அதிலும் சிலர் எனக்கு உறவினர்கள் ஆனார்கள். தமிழால் எங்களை இணைத்த தமிழ் இளையோர் அமைப்பு எனக்கு நிரந்தரமாக அண்ணன்களை, அக்காக்களை தம்பிகளை, மற்றும் தங்கைகளை தந்தது. 15 ஆண்டுகள் கடந்தும் எங்கள் உறவு தொடர்கின்றது. தமிழ் இளையோர் அமைப்பு என்னைப் போன்று பல இளையோர்களை உருவாக்கியது. இன்னும் உருவாக்கும். தமிழ் இளையோர் அமைப்பு இடையூறு அன்றி தனது சேவையை  எமது மொழிக்கும் தமிழீழத்திற்கும் ஆற்ற வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

You may also like...