சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010

பிரித்தானியா வாழ் தமிழீழ மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியமும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுமாக சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு முதல் தடவையாக பிரித்தானிய மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது.

இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவெனில் தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிற்பாடு இவ் நிகழ்வு முறைப்படி தமிழீழ தேசியக்கொடி எற்றலுடனும் அதனுடைய கொடி வணக்க பாடலும் இசைக்க தேசிய கொடி பறக்க விடப்பட்டது, அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. கைகளிலே விளக்குகளை ஏந்திய படி எழுந்து நின்று எமது மாவீர செல்வங்களுக்கு மரியாதையை செய்யப்பட்டதோடு மட்டும் நின்று விடாமல் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய” மாவீரர் பாடல் இசைக்க மாணவர்களின் கண்ணில் சிந்திய அந்த துளிகளுடன் அஞ்சலி செய்யப்பட்டது.

அதன் பிற்பாடு இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் போற்குற்றங்களையும் எடுத்து விளக்கும் விதமான காட்சியளிப்பு முன்னெடுக்கப்பட்டது அதில் எவ்வாறு தமிழ் இராச்சியங்கள் இருந்தன, இலங்கை அரசாங்கத்தின் இனச் சுத்திகரிப்பு, தமிழரின் பூர்விக வாழ்விடங்களின் அபகரிப்பு, இனக் கலவரங்கள் என பலவற்றை உள்ளடக்கி பிரமான்டமான திரையில் காண்பிக்கப்பட்டது. தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக பேச்சும் அதன் பிற்பாடு கனடா தமிழ் இளையோர்கள் முன்னெடுத்த மாவீரர் நாள் செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டது. பின்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு எழுச்சி நிகழ்வு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிற்பாடு அனுராதபுர தரை வான் தாக்குதலின் வீர காவிய படைப்பான “எல்லாளன்” (அதி உன்னத அர்ப்பணிப்பு) முழு நீள திரைக்காவியம் காண்பிக்கப்பட்டது.

You may also like...