Press Release Tamil

இலங்கைக்கு சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள்

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசிக் கொன்றும், அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்தும், அங்கு வாழும் ஈழத் தமிழர்களையே அழித்துவரும் இன ஒடுக்கல் கொள்கையை, சிறிதும் கூச்சநாச்சமின்றி பின்பற்றியும் வருகிறது இந்த கொடிய அரசு.

· 1948-முதல் (இலங்கை சுதந்திரம் அடைந்த வருடம்) தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர்.

· 1956-ல் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டம் கலாச்சாரப் (மொழி) படுகொலையின் தொடக்கமாகும்.

· 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக்கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலையாகும்.

· 1970-லும் அதன் பின்பும் தமிழ் மாணவரின் மேல்நிலைக்கல்வி முடக்கப்பட்டது.

· 1972 ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்பட்டது.

· 1981-ல் அரசின் அமைச்சர்களும், இராணுவ போலிஸ் படையினரும் சேர்ந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரித்தமை, அரசின் இன அழிப்பு நடவடிக்கையின் உத்தேசத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது.

· இலங்கையை ஆண்டு வந்த பல் வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து வெவ்வேறு வகைகளில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளில், நாகர்கோவில் விமானக் குண்டுத் தாக்குதல், செம்மணிப் புதைகுழிகள் போன்ற எண்ணிலா நிகழ்வுகள் சாட்சி பகரும். அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, காணாமற்போதல் ஆகிய யாவும் ஓர் “சாதாரண நாளாந்தர நிகழ்வு” களாகின.

· இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு செல்லுகின்றது முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை.

எமது பாசத்துக்கும் அன்புக்கும் உரிய புலம்பெயர்வாழ் மக்களே, இவ்வளவு காலமும் நாம் பட்ட துன்பங்கள் நீங்க நாம் அனைவரும் ஒன்றினைந்து உழைக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும். இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் எமது மக்கள் ஒரு செய்தியை சொல்லி தெளிவு படுத்தியிருக்கிறார்கள், அதாவது தமிழர்கள் வேறு சிங்களவர்கள் வேறு என்றும் நாம் ஒரு போதும் இணைந்து வாழமுடியாது என்பதுவே அதுவாகும். உறவுகளே எமது மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் ஆயுத முனையில் இருந்துகொண்டே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள், புலம்பெயர்ந்து வாழும் நாம் இந்நாளில் தமிழர் என்ற ஒரு சொல்லிற்குள் ஒன்றினைவோம் என்று உறுதி எடுத்து கொள்வதோடு மட்டும் நிற்காமல் எங்களது தாயகத்தை மீட்க எமது அளப்பரிய பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்.

புலம்பெயர் தேசங்களில் வியாபார, முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு அன்பு கலந்த மிகவும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து “ஸ்ரீலங்கா” என்ற வார்த்தை பிரயொகங்களை உங்கள் நிறுவனங்களில் எங்கும் பாவிர்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். நாம் தமிழர்கள் தமிழர்களாகவே இருப்போம், எமது இனத்தை அழித்த தேசத்தின் பெயரை உச்சரிப்பதால் எமது நாட்டுக்காக உயிர் நீர்த்த மாவீர செல்வங்களையும் எமது மக்களினது ஆத்மாவையும் நாம் இழிவு படுத்துவதற்கு சமனாகும்.

தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

You may also like...

Popular Articles...