10வது ஆண்டாக சிறப்பாக இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் “கற்க கசடற 2020”

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படட கற்க கசடற 10 வெகு சிறப்பாக நடைபெற்றது.புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மொழியின் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் மொழித்திறனாய்வுப் போட்டியினை செவ்வனே செய்திருந்தார்கள். உலகத் தாய்மொழி தினத்தை முன்ணிட்டு இடம்பெற்ற இந்த போட்டி பல சங்க கால இலக்கியங்களை உள்ளடக்கி இடம்பெற்றது. அதில் முக்கியமாக திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் மற்றும் ஔவையார் இயற்றிய ஆத்திசூடி நூல்களும் அடங்கும்.

வருங்கால சந்ததியினரை ஊக்குவிற்பதே இந்த கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும். கற்க கசடற என்னும் இன் நிகழ்வு வட கிழக்கு லண்டன் தொடங்கி, தொடர்ந்து தென் மேற்கு, வட மேற்கு, தென் கிழக்கு என நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்றது.

இச்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் மூன்று இடத்திலும் தெரிவான மாணவர்கள் 23/02/2020 அன்று இடம்பெற்ற இறுதிச் சுற்றில் பங்கேற்றார்கள். தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா ஸ்ரீபாலகிருஷ்ணன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நினைவு வணக்க சுடரினை ஏற்றி பொதுமக்களின் நினைவஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இறுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து சிறப்பினை பெற்றார்கள். இது 10வது வருடம் என்பதால் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் முதல் நான்கு இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

“தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

அதாவது தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். மொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம்.

இதனைத் தொடர்ந்து அனைத்துலக தாய்மொழி நாளை முன்னிட்டு போட்டியாளர்களிடம் கேள்வி பதில் போட்டிகளும் இடம்பெற்றன. மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட மாணவர்களிடம் 15 கேள்விகள் கேட்கப்பட மிகவும் உற்சாகமா கலந்து ஆர்வத்துடன் பதில்களை சொல்லிக்கொண்டே சென்றார்கள். கேள்விகள் தமிழ் மொழி பற்றியும் தமிழீழம் பற்றியும் இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது மற்றும் மாணவர்கள் அனைத்திற்கும் உடனுக்குடன் பதிலளித்து மகிழ்ந்தார்கள்.

எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமை பெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.

« of 7 »

You may also like...