தமிழ் இளையோர் அமைப்பால் சிறப்பாக நடத்தப்பட்ட ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020

 ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் தமிழ் இளையோரின் மறுவாழ்விற்காக “இளந்தளிர் “ நிகழ்வு 2005 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்டது.  பின்பு தமிழ் மற்றும் தமிழீழம் எனும் கருவில் “இளந்தளிர் 2006” பிரித்தானியா வாழ் தமிழ் இளையோருக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும் விதமாக நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து “இளந்தளிர் 2007” எமது வருங்கால தேசத்தைப் பாருங்கள் என்ற கருவில் “தமிழீழம்” என்ற ஒரு நாட்டில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவை சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு இலங்கை அரசாங்கத்தினால் நிறைய சவால்களை சந்தித்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து சவால்களை சமாளித்து; இளந்தளிர் நிகழ்வு மறுபடியும் “இளந்தளிர் 2005” நடந்த இடத்தில் 2011 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டது. சில ஆண்டு இடைவெளியின் பின்பு “இளந்தளிர் 2015” நடாத்தப்பட்டது.

ஐந்து வருட இடைவெளியின் பின்பு   இவ் ஆண்டு “இளந்தளிர் 2020” இடம்பெற்றுள்ளது. தலைவரின் சிந்தனையை மனதில் கொண்டு ‘ஈழத்தின் விதைகள்’ எனும் கருப் பொருளில்  பங்குனி மாதம் 15ம் திகதி இல்பேர்ட் (Ilford) நகரில் தமிழ் இளையோர்கள் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர்.

பிரதம விருந்திரனாக யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரன் பத்திரிகை வந்த காலம் தொட்டும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும் தன் எழுத்துக்களால் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து பிரித்தானியாவில் செந்நெறிச் செம்மல் சமுதாய சோதி என மதிப்பளிக்கப்பட்ட திரு சூசைப்பிள்ளை யோசப் பற்றிமாகரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டார்.  இவர் ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் பன்முக மக்கள் பணி செய்து கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகவணக்கத்துடனும் தமிழீழ தேசியக் கொடியேற்றலுடனும் தொடங்கியது “இளந்தளிர் 2020” நிகழ்வுகள். முதல் நிகழ்வாக “தாய் தந்தை பிறந்த நாடு” எனும் பாடலுக்கு அபிநயம் பிடித்தார் ஒரு சின்ன சிறிய சிறுமி.  ஈழத்தின் விதைகள் என்ற கருவிற்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது இந்த நடனம்.

அதனை தொடர்ந்து வயலின் இசையில் தமிழீழப் பாடல்கள். செவிகளுக்கு மிகவும் இனிமையாகவும் எமது போராட்டத்தில் கடந்து வந்த பாதையை நினைவூட்டும் விதமாகவும் இருந்தது.

அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது. அவர் உரையாற்றுகையில், தமிழ் இளையோர் அமைப்பு 15 ஆண்டுகளாக பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்து நாடு சார்ந்த விடையங்களிலும் முக்கிய பங்குவகித்ததாகவும் இளையோர்களின் இந்த தன்னம்பிக்கைக்கும் தியாகத்திற்கும் தாங்கள் தலைவணங்கின்றோம் என குறிப்பிட்டார். பெற்றோர்கள் தமது சிறுவர்களுக்கு தாங்கள் அனுபவித்த இன அழிப்பு சம்பவங்களின் உண்மைத்தன்னையை சொல்லி வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தாயகத்தின் மேன்மையைக் கூறும் ‘தாய் மண்ணை முத்தம் இட வேண்டும்’ எனும் பாடலுக்கு தனது நடன திறமையை வெளிக்காட்டினார் இன்னொரு சிறுமி.

அதனைத் தொடர்ந்து சுடர் கலைப் பள்ளி குரலிசைக் குழு மாணவர்களின் தாயகப் பாடல். “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்” , போராட்டக் காலத்தில் கடற்தொழில் செய்யும் எம் உறவுகள் சந்தித்த இன்னல்களை வெளிக்காட்டும் பாடல். அதனை புலம்பெயர் நாட்டில் பிறந்து வளர்ந்த சிறுமிகளின் குரலில் கேட்பது ஏதோ மனதிற்கு ஒரு  ஆறுதலாக அமைந்தது.

அடுத்த நிகழ்வாக எழுச்சி நடனம். நல்லைக் குமரன் நர்த்தனாலய மாணவர்கள் எமது தேசியத் தலைவரின் பெருமையை எடுத்துகாட்டும் “பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

 நாம் வாழும் நாட்டிற்கு சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்
 ‘இயற்கை’ எனும் நாட்டிய நாடகம் வோல்தம் பொறஸ்ட் தமிழ் பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. நாம் உபயோகிக்கும் பொருட்களை “மீள்சுழற்சி” செய்வதன் முக்கியத்துவத்தை சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.

வானவெளி நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் இன்னொரு எழுச்சி நடனத்தை சுடர் கலைப் பள்ளி மாணவர்கள் அரங்கேற்றினர்.

“இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாக காண்போமே மாவீரரே” பாடலை தனது இனிமையான குரலில் பாடி சபையோர்களின் செவிகளுக்கு விருந்தளித்தார் தேனுகா சிவநேசராஜா அவர்கள்.

இந்த ஆண்டு தம்மை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்ற தமது சக உறுப்பினரும் தோழியும் ஆகிய செல்வி திக்சிகா அவர்களுக்கு ஒரு சிறிய ஆவணப்படம் மூலம் தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள் தமிழ் இளையோர் அமைப்பினர்.

நிகழ்வுகளில் அடுத்ததாக ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணை சிறப்பிக்கும் விதமாக ‘வன்னி மயில்’ என்ற பாடலுக்கு இலண்டன் லூசியம் சிவன் தமிழ் பாடசாலை மாணவர்கள் நடனம் ஆடினர்.

கரோ ஒன் த கில் தமிழ் கல்விக் கலையக மாணவர்களின்
“பண்டாரவன்னியன்”  நாடகம் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்தது. கடல் கடந்து வெகுதொலைவில் இருந்தாலும் இளைய தலைமுறை தமிழ் மன்னர்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களுடைய கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு மிகவும் சிறப்பாக நடித்தனர்.

அதனைத் தொடர்ந்து இசைப் பிரியர்களின் இசைக் கச்சேரி. தமிழர்களின் மங்கள இசை வாத்திய கருவியில் தமிழீழப் பாடல்கள். மிகவும்
சிறப்பு. சகோதரர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.

  “ஒன்றாகும் காலமிது வென்றாடும் நேரமிது” எமது புலம்பெயர் சமூகத்தினரிடம் தற்போது தாங்கள் எதிர்பார்ப்பதை தமது இனிமையான குரலால் வெளிக்காட்டினர் தமிழீழத்தின் நாளைய சந்ததியினர்.

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி என்னும் பாடலுக்கான நடனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.


“இளந்தளிர் 2020” நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத்தின் விதைகளாக விளங்கும் எங்களுடைய  அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினரின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு.

மிக அருமையாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தங்கள் திறமைகளை மீண்டும் இந்த உலகிற்கு பறைசாற்றிய அனைத்து தமிழ் இளையோர்களும் பாராட்டுக்குரியவர்கள். திசை மாறும் எமது போராட்டத்தை மீண்டும் தட்டி எழுப்பி “தமிழீழம்” காணும் வரை அதற்குரிய வேலைத்திட்டங்களை உருவாக்கி தமிழ் இளையோர் அமைப்பு செயற்பட வேண்டுமென வாழ்த்துகின்றோம்.

« of 4 »

You may also like...