வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல்

எமது கடந்த கால வரலாறானது எமது வெற்றிகளாலும் தோல்விகளாலும் எழுதப்பட்டுள்ளது, எமது நியாயமான முயற்சிகளின் பலன்களாலும் பொறுமையிழந்த சந்தர்ப்பங்களினால் உருவான இருண்ட நினைவுகளாலும் நிரப்பப் பட்டுள்ளது. எமது மக்களின் வரலாறானது இதுவரை எமது கரங்களினாலேயே எழுதப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்கள் அமைவது அரிது, ஆனால் இன்று எம் முன்னால் எமது எதிர்காலத்தை நாம் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வட்டுகோட்டைத் தீர்மானத்திற்கான தேர்தல் என்கின்ற வடிவில் அமைந்துள்ளது. வாக்குச்சீட்டில் “ஆம்” எனப் புள்ளடி இடுவதன் மூலம் இதை நிகழ்த்திக்காட்ட முடியும்.

மேற்குலகுக்கு மிகவும் பரிச்சயமான இளையோர் அமைப்பு என்கின்ற வகையில் தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஜனநாயக ரீதியில் முன்னிலைப் படுத்துவது எமது மிகப் பெரிய பொறுப்பாகும். எமது மக்களுடைய அபிலாசைகளை நாம் வாழுகின்ற நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் உட்பட்டு வெளிப்படுத்துதல் எமது அடிப்படை உரிமையாகும்.

இன்று எமது தாயக மக்களின் தலைவிதி இலங்கை அரசு என்ற கொடிய எழுத்தாளனால் எழுதப்படுகின்றது. இலங்கையில் எத்தனை புதிய அரச தலைவர்கள் வந்தாலும் போனாலும் தமிழர்கள் தொடர்பான இலங்கை அரசின் அணுகுமுறை என்றும் மாறியதில்லை. அரசு என்று தமிழர்களுக்கான ஒரேயொரு ‘அழிவு’ என்ற முடிவையே என்றும் எழுதுகின்றது, அதனை அனைவரும் வக்கிரமான ஒரு அமைதியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது குரல் அதற்கு எதிராக ஒலிக்குமானால் அது வன்முறையால் அடக்கப் படுகின்றது.

அதனால் தமிழ் இளையோர் அமைப்பு எம் மக்கள் அனைவரையும் தமிழீழத்திற்கு ஆதரவாக வாக்களித்து, எம்மக்களின் தலைவிதிக்கு நிரந்தர தீர்வை, ஒரு நல்ல முடிவை எழுதுமாறு கேட்கின்றது.

நாம் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் எமது தொப்புள் கொடி தாயகத்துடனேயே தொடர்பு கொண்டுள்ளது. அதனால் நாம் அனைவரும் நாடற்றவர்கள் என அடையாளப் படுத்தப் படுகின்றோம். தயவு செய்து இனிமேலும் இந்த அவதுறை தொடர விடாது பேனாவை எமது ஆயுதமாக பாவித்து எமது எதிர்காலத்தை நாமே எழுதுவோம்.

தமிழீழத்தின் எதிர்காலம் எம் கைகளிலேயே உள்ளது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

You may also like...